மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி இருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இது தொடர்பாக மருந்தாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

Advertisment

இந்த சோதனையில் விதிகளை மீறி எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே சமயம் இந்த இருமல் மருந்தைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை போலீசார் உதவியுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த இருமல் ருந்து விற்பனைக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.