திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவானது நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இன்று (04.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் வாதிடுகையில், “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்குத் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு அதிகாரம் கிடையாது. 

Advertisment

ஏனென்றால் தர்கா நிர்வாகம் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அதனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றமே எப்படி அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியும். தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளார். இது  விதிமுறையை மீறியது ஆகும். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முதலில் பிறப்பித்த தூண் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கில் மேல்முறையீடு செய்வதற்குக் கோவில் நிர்வாகத்திற்குக் குறைந்தது 30 நாட்களாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும். 

Advertisment

அவ்வாறு கால அவகாசம் கொடுக்காமல் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தீபம் ஏற்ற உயர்நீதிமன்றத்தில் உள்ள சி.எஸ்.ஐ.எப் படையினரின் பாதுகாப்போடு  செல்லுங்கள் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதுவும் விதிமுறைக்கு எதிரானது. சட்ட விரோதமானது ஆகும். இந்த உத்தரவால் தான் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் தான் 144 தடை உத்தரவு போட வேண்டிய தேவை உருவானது. பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எல்லாம் மலை உச்சிக்குச் செல்ல எடுத்த முயற்சிகளால் தான் காவலருக்கு மண்டை உடைந்துள்ளது. தலையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.எப். படையினர் அரசு நிறுவனங்களுக்குப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு படை தான். அதனை காவல்துறைக்கு இணையாகச் செயல்படுத்த முடியாது. 

madurai-high-court

மனுதாரரோடு அவர் பாதுகாப்புக்காக சி.எஸ்.ஐ.எப். படையினர் 67 பேரை அனுப்பி வைத்தது விதிமுறைக்கு எதிரானது. உயர்நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு வந்தவர்களை எப்படி இன்னொரு தனிநபருடைய பாதுகாப்புக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் தனி நீதிபதியின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டது ஆகும். உயர்நீதிமன்ற கிளையின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டவர்கள்  எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பாதுகாக்க முடியும்?. எனவே சி.எஸ்.ஐ.எப் படையினரை அனுப்பியதில் விதிமீறல் உள்ளது.

Advertisment

 தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற உத்தரவுகள் எல்லாம் தனி நீதிபதியால் பிறப்பிக்க  முடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே  தெளிவாக சில விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது. அப்படி இருந்தும் எதற்காகத் தனி நீதிபதி இப்படி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.