The night-time harvest festival! A strange event where only men participate! Photograph: (pudukottai)
தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வங்கள், குலதெய்வ வழிபாடுகள் கிராமங்கள் தோறும் நடந்து வருகிறது. இதில் வித்தியாசமான வினோதமான திருவிழாக்களும் நடக்கிறது. அந்த வகையில் ஆண்கள் மட்டுமே இரவில் பாளை எடுத்துச் சென்று பிடாரியம்மனை வழிபடும் ஒரு பழக்கம் பன்னெடுங்காலமாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமம் மாவட்டத்திலேயே பெரிய கிராமங்களில் ஒன்று. இங்கு கிராம காவல் தெய்வமாக ஊரின் எல்லையில் பெரிய குளத்தின் கரையில் எழுந்தருளியுள்ளது பிடாரியம்மன் கோயில். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் முளைப்பாரி, மது எடுப்பு திருவிழா நடக்கிறது. அதே கடந்த புதன்கிழமை முளைப்பாரித் திருவிழா நடந்து முடிந்தது. வரும் புதன்கிழமை மது எடுப்புத் திருவிழாவிற்கு கிராமத்தினர் தயாராகி வருகின்றனர். சொந்தங்களுக்கும் அழைப்புக் கொடுத்து வருகின்றனர். இதில் பல ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/04/a4666-2025-08-04-23-05-42.jpg)
இந்தக் கோயிலில் தான் இரவு நேரத்தில் ஆண்கள் மட்டுமே பாளை எடுக்கும் வினோதமான நிகழ்வு காலங்காலமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமை இரவும் நடந்துள்ளது. அதாவது, நான்கு வீதியை சேர்ந்த பொதுமக்களில் உள்ள ஆண்கள் மட்டுமே இந்த பாளை எடுப்பில் கலந்து கொள்கின்றனர். மாலையிலேயே பாளை, குடங்களை தயார் செய்து பிடாரியம்மன் கோயிலுக்கு வந்து பாளைகளை உடைத்து குடங்களில் வைத்து அலங்காரம் செய்து பிறகு இரவில் பூசாரி மற்றும் கிராமத்தினர் வந்து பாளை குடங்களுக்கு விபூதி தெளித்து பாளை குடங்களை பக்தர்கள் தலையில் தூக்கி வைத்த பிறகு கோயில் வளாகத்தை 3 முறை சுற்றிவந்து பாளை குடங்களை இறக்கி வைத்து அம்மனுக்கு தீபம் காட்டி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து 9 கரைகளுக்கும் படையல் பிரசாதம் வழங்கிய பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/04/a4668-2025-08-04-23-06-15.jpg)
எதற்காக ஆண்கள் மட்டும் இரவில் பாளை எடுக்கிறார்கள் என்ற நமது கேள்விக்கு, 'பல தலைமுறைகளுக்கு முன்பு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு முழு விவசாய கிராமமாக இருந்த கொத்தமங்கலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான கால்நடைகள் வளர்க்கப்பட்டுள்ளது. அப்போது கால்நடைகளுக்கு அம்மை போன்ற நோய்கள் ஏற்பட்டு ஏராளமான கால்நடைகள் இறந்து போனது. அந்த நேரத்தில் நான்கு வீதியை சேர்ந்த சிலர் பிடாரி அம்மனிடம் எங்கள் கால்நடைகள் எல்லாம் இப்படி பலியாகிறதே என்று கண்ணீரோடு கேட்டுள்ளனர். அப்போது அங்கு நின்ற பூசாரி அம்மாளுக்கு திங்கள் கிழமை இரவில் 16 பாளை எடுங்கள் சரியா போயிடும் என்று சொல்லிவிட்டு விபூதியை தூவிச் சென்றுவிட்டாராம். அதன் பிறகு ஒவ்வொரு ஆடி மாதத்திலும் மது எடுப்புத் திருவிழாவிற்கு 2 நாள் முன்பு செடி, கொடிகள் மண்டிக்கிடந்த இந்தப் பகுதியில் இரவில் நான்கு வீதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் பாளை எடுத்து கோயிலைச் சுற்றி வழிபட்டு வருகிறோம். இதில் பெண்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பழக்கம் இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் கூட மது எடுப்பு நிறுத்தப்பட்டாலும் இரவில் பாளை எடுப்பதை நிறுத்தவில்லை. எங்கள் முன்னோர்களின் நம்பிக்கையை இன்று வரை செயல்படுத்தி வருகிறோம்' என்றனர்.