விசிகவின் தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் (78) காலமானார். இன்று திருமாவளவனின் பிறந்தநாள் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார் என்பது பெருந்துயரமளிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/17/a4900-2025-08-17-16-44-13.jpg)
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரிய தம்பி, பெரிய தம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்ட வகுப்பு முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை. அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!' என தெரிவித்துள்ளார்.