மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சிக்கு எதிராக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் மீது ஏற்கனவே தற்காலிக ஒழுங்கு நடவடிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எடுத்திருந்தார். மல்லை சத்யாவிடம் விளக்கம் கேட்டு 15 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி இருந்தார்.
Advertisment
தொடர்ந்து இன்று கட்சியில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், 'மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்' என வைகோ தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா பேசுகையில், ''பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்தார் என்று ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி ஒரு அடாத பழிச்சொல்லை எப்போது என் மீது வைகோ போட்டாரோ அன்றே நாங்கள் காசு கொடுத்து வாங்கிய கட்சி வேட்டியை அவிழ்த்து வைத்து விட்டோம். காரில் பறந்து கொண்டிருந்த கொடியை எடுத்து விட்டோம். நாங்கள் சுயமரியாதை காரர்களாகவே வலம் வந்தோம். அதனால் தான் மக்களிடம் நீதி கேட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் கட்சிக்கொடி, பெயர் என எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. அந்த அறம் சார்ந்த அரசியலை நாங்கள் முன் நகர்த்தி வந்தோம். 

அதேபோல் 19ஆம் தேதி பூவிருந்தவல்லியில் நடைபெற்ற சென்னை மண்டல செயல் வீரர்கள் கூட்ட அரங்கிலும் நாங்கள் அடையாளங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. எங்களுடைய உழைப்புகளை திருடி மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற பேரியக்கம் கடந்த நான்காண்டுகளாக மகன்திமுக என்று மாறி அது ஒரு திராவிட இயக்கத்தின் திரிபுவாத இயக்கமாக அதன் விழுமிய கொள்கைகளில் இருந்து மனதில் சுருங்கி போயிருக்கிறது''என்றார்.