தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி. அவரது மகள் காவியா(வயது 26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.  இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர் வழக்கம் போல், கடந்த நவம்பர் 27ஆம் தேதி வியாழக் கிழமை வீட்டில் இருந்து பள்ளிக்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, நடுவழியில் வழிமறித்த பெயிண்டர் அஜித்குமார் (29) என்பவர் அவருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவியா தலையில் வெட்டினார். இதில் காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அஜித்குமார் சரணடைந்தார். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, காவியாவை பல வருடங்களாக காதலித்தேன். ஆனால் இப்ப வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளதாக வீடியோ காலில் வந்து சொன்னார். அதனால் காவியாவை வெட்டிவிட்டதாகக் கூறினார்.

Advertisment

இதனையடுத்து அஜித்குமார் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (02-12-25) அஜித்குமார் தனது வேட்டியை அவிழ்த்து செல்லில் உள்ள ஜன்னலில் கட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சிறை காவலர்கள் ஆபத்தான நிலையில் இருந்த அஜித்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அஜித்துக்கு போலிசார் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.