கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கோயில் நிர்வாகம் வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. அதே நேரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை (12-12-25) அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதிட்ட அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்தில் " இந்த வழக்கு பொது நல மனுவைபோல் தீர்மானிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றும் "மனுதாரருடைய மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட இயலாது" என்றும் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
மேலும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு, இன்று வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், பாரம்பரியமாக வழக்கம் போல் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும், அந்த மனுவானது தனி நபர் விருப்பத்தின் பேரின் அளிக்கப்பட்ட மனு என்றும், தனிமனித விருப்பத்திற்காக கோயில் நிர்வாகத்தின் பாரம்பரிய மரபுகளை மற்ற முடியாது என்றும் வாதத்தை முன் வைத்தது அரசு தரப்பு. மேலும் ஆகம விதிகளை மீறி திருப்பதி கோயில் நிர்வாகம் கூட செயல் படமுடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
பாரம்பரியமாக தீபம் ஏற்றும் இடத்தில் இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை எனவும் , மேலும் அந்த இடத்தில் தர்கா இருப்பதால் எதிர் மனுதாரராக தர்கா நிர்வாகத்தையும் சேர்த்திருக்க வேண்டும் எனவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. மேலும் அந்த தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் மனுதாரர் வழங்கவில்லை எனவும், அந்த தூண் தீபத்தூண் அல்ல அது நில அளவைக்கான சர்வே கல் எனவும் அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/a-2025-12-15-18-13-13.jpeg)