தமிழ் இணையக் கல்விக் கழகம் (TVA) ஊடாக கொரிய தமிழ்ச்சங்கம் சிறப்பாக செயல்படுத்தி வரும் கல்விகரையில ஆசிரியர் பட்டயப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்குப் பட்டயங்கள் வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்ற #umaginetn மாநாட்டின் நிறைவு விழாவில் நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தகவல் தொழில்நுட்பம்–டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டயங்களை வழங்கினர். கொரியாவில் வாழும் மக்களிடையே தமிழைக் கற்பிக்கும் கொரிய தமிழ்ச்சங்கத்தின் சீரிய கல்விப் பணியை அமைச்சர்கள் மனதாரப் பாராட்டினர்.

Advertisment

இந்தப் பயிற்சியை கொரிய தமிழ்ச்சங்கம் வழியாக வெற்றிகரமாக முடித்த முனைவர்கள் மோ. பத்மநாபன், ஶ்ரீ. பூங்காவிதை, சுகுணா பெருமாள் மற்றும் பொறியாளர்கள் சாமிராஜன், பத்மப்ரியா, பிரேமா, சுசித்ரா, கீதா பிரீத்தா ஆகிய எட்டு பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisment

பயிற்சியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மோ. பத்மநாபன் நன்றியுரையில், “தமிழக அரசின் இந்த உயரிய அங்கீகாரம் எங்களுக்கு பெருமகிழ்ச்சியையும், எதிர்காலத்தில் இன்னும் ஊக்கத்துடன் செயல்பட உத்வேகத்தையும் அளிக்கிறது. பயிற்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் திரு. கோமகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கொரிய தமிழ்ச்சங்கத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” எனத் தெரிவித்தார்.

நேரில் வர இயலாத மாணவர்களின் சார்பில், கொரிய தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் செ. அரவிந்தராஜா, துணைத் தலைவர்  தெ. விஜயலெட்சுமி, தாயக தொடர்பாளர் முனைவர் பிரபாகரன் மற்றும் எதிர்கால ஆசிரியர் மாணவி  அபர்ணா ஆகியோர் அமைச்சர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே, குறிப்பாக கொரியாவில் வாழும் மக்களிடையே தமிழைக் கொண்டு சேர்க்கும் கொரிய தமிழ்ச்சங்கத்தின் இத்தகைய கல்விச் சேவைகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

Advertisment