சமீபமாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகமாக பிடிபட்டு வருகின்றன. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரு மலை அடிவாரத்தில் சென்ட் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடியை அதிகாரிகள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் சத்தியக்கல் மலையடிவாரத்தில் சுமார் 60 சென்ட் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற 5க்கும் மேற்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சா செடிகளைக் கண்டறிந்து அவற்றை வேருடன் பிடுங்கி அதே பகுதியில் தீயிட்டு எரித்தனர். கஞ்சா செடியை பயிரிட்டது யார் என்று தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செடிகளை தீயிட்டு எரிக்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.