The 'Keeranipatti Copper Coin' tells the story of the foundation of the Thirumayam Fort Photograph: (history)
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டம், கீரணிப்பட்டியில் விஜயரகுநாத சேதுபதி மன்னர் கால செப்பேடு கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
கீரணிப்பட்டி ஸ்ரீ சூலாட்டுக்காளி கோவில் வீட்டுப் பங்காளிகள் வசம் ஒரு செப்பேடு உள்ளதாக வந்த தகவலையடுத்து காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அச்செப்பேடு குறித்து ஆய்வு செய்தவர்கள் சொல்லும் தகவல் 'கீரணிப்பட்டி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சாலிவாகன ஆண்டும் தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை. ஆனால், தமிழ் ஆண்டின் அடிப்படையில் இச்செப்பேடு குறிப்பிடும் ஸ்ரீமுக ஆண்டு கிழவன் சேதுபதியின் காலமாக (கி.பி.1693) ஆக இருந்தாலும் இச்செப்பேட்டில் இடம்பெறும் விஜய ரகுநாத சேதுபதி (கி.பி.1713-1725) கிழவன் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் என்பதால் அவரின் காலத்தைச் சேர்ந்ததாகவே கருத முடிகிறது.
மேலும், விஜய ரகுநாத சேதுபதி மன்னர் அவரது ஆட்சிக்காலத்தில் புதிய கோட்டைகள் அமைத்துள்ளதாலும், இச்செப்பெட்டிலும் விஜயரகுநாத சேதுபதியின் காலத்தில் திருமயம் கோட்டைக்கு அடி மதில் போட்ட செய்தி குறிப்பிடப்படுவதாலும், இச்செப்பேடு விஜயரகுநாத சேதுபதியின் (கி.பி.1713-1725) காலத்தைச் சேர்ந்தது என அறியமுடிகிறது.
கல்வாசல் நாட்டு குலசேகரபுரம் இளையாத்தங்குடிக்குக் கிழக்கே உள்ள பகுதியிலிருந்து வந்த கருமார் படை செட்டன் முத்தன், செட்டன் கருப்பன், செட்டன் பிச்சன் ஆகிய மூன்று வகைப் பிரிவினரும் குதிரை, ஆடு, மாடு வலசையோடு ஆமனிக்குளம் (ஆவினிப்பட்டி) வந்து தங்கியிருந்தனர். அவர்களைக் கண்ட ஏழு நகரத்தாரிடம், தஞ்சாவூர் பாளையப்பட்டு அரண்மனை சண்டையால் அங்கிருந்து புறப்பட்டு பிழைக்கப் போறோம் என்று கூறியபோது, ஏழு நகரத்தாரும் சேர்ந்து அதைத் தடுத்தனர்.
உங்களுக்கு வேண்டியதை நாங்கள் தருகிறோம், நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் எங்களுக்கு காணியாச்சியாக (நிலக்காணி), தனி ஊரும், மண்ணும், மனையும் கொடுத்தால் இருப்போம் என்று கூறினார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/16/a4896-2025-08-16-23-10-55.jpg)
அப்படியே தருவதாகக் கூறிய ஏழு நகரமும், நன்மைக்கு ஒரு பணம், தீமைக்கு ஒரு பணம், மண்ணு, மனை காணியாச்சி பட்டையம் கொடுப்பதாக பேசி, திருமயம் கோட்டைக்கு அடிமதில் போடுகிறபோது விஜயரகுநாத சேதுபதியவர்களைச் சந்தித்து ஏழு நகரமும், மூன்று வகைப்பட்ட மன்னர் கருமார் படையும் போய்ச் சொன்னதாக கூறுகிறது.
இதிலிருந்து விஜயரகுநாத சேதுபதி காலத்தில் திருமயம் கோட்டை கட்டப்பட்டது என்ற கருத்தை இச்செப்பேடு கூறுகிறது.. அதன்படி சேதுபதி மன்னரின் உத்தரவுப்படி ஏழு நகரத்தாரும் கூடி ஆவுடையார்கோவிலில் இருந்து கல்லு வெட்டி, இந்த பட்டையத்தின் மூலம் கருமார் படையான செட்டன் முத்தன், செட்டன் கருப்பன், செட்டன் பிச்சன் ஆகியோருக்கு காணியாச்சி கொடுத்ததைக் கூறுகிறது.
அதாவது குலசேகரபுரம், இளையாத்தங்குடி கீழத்தெரு புது ஊருக்கு எல்லையாவது கிழக்கெல்லை, புள்ளமங்கலத்து எல்லைக்கல்லுக்கு மேற்கு வடபுறக் கல்லு, செட்டி ஊரணிக்கு தெற்கு எல்லை, விராமதிக் கண்மாயில் எல்லைக் கல்லுக்கு வடக்கு மேற்கெல்லை, கோயில், குளம், நஞ்சை, புஞ்சை, அம்பலம், உம்பலம் ஆகியவை இச்செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கல்வாயில் அல்லது கல்வாசல் நாடு என்பது இளையாத்தங்குடி, நெய்வாசல், பில்லமங்கலம், ஈழக்குடிப்பட்டி, ஆவினிப்பட்டி, இரணியூர், விராமதி, முத்தூர், செவ்வூர் முதலான ஊர்களைக் கொண்ட பகுதியாகும். இளையாத்தங்குடியின் முந்தைய பெயராக குலசேகரபுரம் இருந்துள்ளது என்பதை கல்வெட்டுக்களும், நகரத்தார் ஆவணங்களும் கூறுகின்றன.
இங்கு ஏழு நகரம் என்பது இளையாத்தங்குடி நகரத்தார், மாத்தூர் நகரத்தார், இலுப்பக்குடி நகரத்தார், சூரைக்குடி நகரத்தார், வேலங்குடி நகரத்தார், வைரவன்பட்டி நகரத்தார், நேமங்கோயில் நகரத்தார் பிரிவுகளைக் குறிக்கிறது என்றனர்.