dmk Photograph: (mrk panneerselvam)
10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தலைநகர் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டார். உடன் ஜி.கே.மணி, காந்திமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், ''ஒவ்வொரு சமுதாயமும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கை எடுங்கள். அதனை ஏன் எடுக்கத் தயங்குகிறீர்கள். அதனால் உங்களுக்கு நன்மை தானே கிடைக்கும். உங்களுக்கு நல்ல பெயர் தானே கிடைக்கும். ஒவ்வொரு முதலமைச்சரும் ஒவ்வொரு கால காலகட்டத்திலே இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அது சரியாகப் பங்கிடப்படவில்லை என்ற நிலையிலே தான் இன்றைக்கு இந்த அறப்போராட்டத்தை நடத்துகிறோம்'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் நடத்திய போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எதுவாக இருந்தாலும் செய்ய தமிழக முதல்வர் தயாராக இருப்பார். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த 10.5% பாதிப்பா என்பதை கண்டறிய ஒரு குழு அமைத்து ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி பாரதி அவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். சாதக பாதகம் அவருக்கு தெரியும். இதனால் சாதகமா பாதகமா என்பது எங்களுக்கு தெரியும். இப்போது இட ஒதுக்கீடு பொறுத்தவரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் நல்ல அதிகமான வாய்ப்பை பெற்று கொண்டிருக்கின்றோம். 10.5 போச்சுன்னா இன்னும் குறையும். அன்புமணி மட்டுமல்ல நாங்களும் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் தான். அதனுடைய சாதகம் பாதகம் எங்களுக்கு தெரியும். இடஒதுக்கீடு கொடுத்ததே கலைஞர்தான். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் பண்ணியவர்கள் கிட்டத்தட்ட 21 பேர் சுடப்பட்டு இறந்துவிட்டார்கள். அந்த குடும்பத்துக்கும் பாட்டாளி கட்சிக்காரங்க யாரும் வேலை வாய்ப்பு வாங்கித் தரவில்லை. ஒன்னும் கொடுக்கவில்லை. ஆனால் கலைஞர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தான் இடஒதுக்கீடும் கொடுத்து அந்த குடும்பங்களுக்கு மொழி போராட்ட வீரர்கள் என்ற பட்டத்தையும் கொடுத்து மாதம் மாதம் ஓய்வு ஊதியம் கொடுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசில் பாட்டாளி கட்சியில் இருந்த பொன்னுசாமி அமைச்சராக பணியாற்றினார். அன்புமணி ஐந்து ஆண்டு காலம் பணியாற்றினார். அதேபோல் சண்முகம் ஐந்து ஆண்டு காலம் எம்பி, அமைச்சராக பணியாற்றினார். அதேபோல் தலித் எழுமலை பணியாற்றினார். இப்படி மந்திரியாக பணியாற்றினார்கள். ஆனால் அந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்களா? 21 குடும்பம் செத்து போச்சே அந்த குடும்பங்கள் எப்படி இருக்கு என பாமக பார்த்ததா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு உயிர் தண்ணீர் கொடுத்து கலைஞர்தான் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை செய்தார்'' என்றார்.
Follow Us