கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கரூரில் நடந்த வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. விஜய் பயணித்த பேருந்து விபத்து தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டதா, வழக்குப்பதிய என்ன தடை?. காவல் துறை தனது கைகளைக் கழுவி விட்டதா?. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குக் கருணை காட்டுகிறீர்களோ?. பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள். வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?.

Advertisment

கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதைக் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இருக்க முடியாது. பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவும் இல்லை’ என்று தவெக கட்சிக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, எக்ஸ் பக்கத்தில் இலங்கை, நேபாளம் போன்று அரசுக்கு எதிராக புரட்டி வெடிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பதிவை நீதிபதி செந்தில்குமாரிடம் காண்பிக்கப்பட்டது. இதனை கண்ட நீதிபதி, ‘ஆதவ் அர்ஜுனா என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து நீதிபதி, ‘ஒரு சிறிய வார்த்தை கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும். புரட்சி தான் ஒரே வழி என பதிவிட்டதன் மூலம் அவரின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். நேபாளம், வங்கதேசம் போன்று புரட்சி தான் ஒரே வழி என பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

முன்னதாக, த.வெ.க நிர்வாகியான த.வெக. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையான நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். இருப்பினும், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.