மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (05.12.2025) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முன்னிட்டு, அதிமுகவின் மூத்த தலைவர்கள், ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும்தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதே போன்று  அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

Advertisment

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எங்களுடைய நோக்கம், கொள்கை ஒன்று தான். அது, பிரிந்திருக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், “வரும் 15ஆம் தேதி தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறினீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இந்த கேள்வியே தப்பு. நான் எந்த சூழ்நிலையும் எப்பொழுதும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை. நீங்கள் கேள்வி கேட்பதைத் தவிர்க்கவும்” எனத் தெரிவித்தார். 

Advertisment

இதனையடுத்து, “செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். நீங்கள் ஏதாவது அவரிடம் பேசினீர்களா?. நீங்களும் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு  உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “அவர் என்னிடம் பேசவும் இல்லை. நான் அவரிடம் பேசவும் இல்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக,  ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம், சென்னை வேப்பேரியில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி (24.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ops-sengottaiyan

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “டிசம்பர் 15ஆம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கும் முடிவு தொண்டர்கள் விரும்பும் முடிவாக இருக்கும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முக்கிய முடிவை அறிவிக்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதி எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும். நான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஏற்ற வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்குள் நான் உள்ளே சென்று மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் திருந்தவில்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதி திருத்தப்படுவீர்கள்” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment