ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப் பகுதிக்கு உட்பட்ட, மாதேஸ்வரன் மலை கோவில் செல்லும் வழியில், காரைக்காடு - பாலாறு சோதனை சாவடி இடையில் நேற்று முன்தினம் (10.01.2026) மாலை எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இது குறித்த தகவலின் பெயரில் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதில் சில மணி நேரங்களுக்கு முன்புதான் உடல் எரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது பஸ்ஸில் சுற்றுலா வந்த வட மாநில கும்பல் உடலை எரித்து சென்றது தெரியவந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக்கு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பர்கூர் போலீசார் கர்நாடகா மாநிலத்திற்கு சென்றனர். மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நின்று கொண்டிருந்த பஸ்சை நேற்று (11.01.2025) மதியம் கண்டுபிடித்தனர். அங்கு காத்திருந்த போலீசார் பஸ்சில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் பஸ்சில் சுற்றுலா வந்துள்ளனர். மதுரையில் கோவிலுக்கு சென்ற போது மூல் சாண்ட் பால் (வயது 70) என்ற முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது மனைவி சகோத்ராபால் (வயது 65) மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என கூறிய போது மூல் சாண்ட் பால் மறுத்த நிலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல ரூ. 40 ஆயிரம் கேட்டுள்ளனர் அவ்வளவு தொகை இல்லாததால் பஸ்ஸிலேயே உடலை கொண்டு சென்றனர். அப்போது ஈரோடு வனப்பகுதியாக செல்லும்போது சென்னம்பட்டி வனப்பகுதிக்கு உட்பட்ட காரைக்காடு - பாலாறு சோதனை சாவடி அருகே அவரது உடலை எரிக்க முடிவு செய்து அதன்படி எரித்துள்ளனர். அதே சமயம் இறந்தவரின் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். சடங்குகளை முடித்துக் கொண்டு பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி வந்தனர்.
Follow Us