புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பகுதியிலுள்ள சின்ன ரயில்வே கேட்டின் அருகே மாயாண்டிசாமி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் அருகே பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதியில் பொட்டலமாக  இருந்த பாலிதீன் பை ஒன்றை அந்தப் பகுதியிலிருந்த நாய் ஒன்று இழுத்துச் சென்றது. அந்த பையை அங்குள்ள ஒரு வீட்டு வாசலின் முன்பு வைத்து நாய் கடித்துக் குதறியது. அப்போது, அந்த வீட்டில் இருந்த கல்லூரி மாணவி ஒருவர் அந்த பையில் ஒரு பச்சிளம் குழந்தையின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

Advertisment

அதன் பின்னர் அந்த நாயை விரட்டி விட்டு அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் பார்த்த போது தான் அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை என்பதும், தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பசியுடன் அழுத அந்த பெண் குழந்தைக்கு மாணவியும் அவரது தாயாரும் சிறிதளவு பால் கொடுத்துள்ளனர். பின்னர் மாணவியின் தாய் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நலம் மற்றும் சிறப்புச் சேவைத்துறை அலுவலகத்திற்கு இது குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இதையடுத்து, 108 அவசர ஊர்தி மூலமாக அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அந்த பச்சிளம் குழந்தையை அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரமே ஆன, தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு பெண் குழந்தை பொட்டலமாகக் கட்டப்பட்டு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறாக மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.