இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி (07.10.2023) கடும் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 2 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலில் 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி பேச்சுவார்த்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் மீது நடத்தி வந்த குண்டுவெடிப்பு தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியது. 

Advertisment

இதனையடுத்து, பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதற்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்து எகிப்தில் இன்று (13.10.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் காசா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் பங்கேற்றார். இந்தப் போர் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment