‘ஐ லவ் முஹமது’ என்ற ஒரே ஒரு பலகையால் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற வட மாநிலங்களில் முஸ்லிம்கள் - இந்துகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே உள்ள ராவத்பூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முஸ்லிம்கள் சார்பில் ஈத்-இ-மிலாத்-உன்-நபி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, ‘ஐ லவ் முஹமது’ என்ற எழுதப்பட்டிருந்த பலகை ஒன்று கூரை மேல் அமைக்கப்பட்டிருந்தது. இந்து மக்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில் வேண்டுமேன்றே இந்த பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத உணர்வுகள் புண்படுவதாகவும் அந்த பலகைக்கு உள்ளூர் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மத உணர்வுகளை புண்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

போலீசின் இந்த நடவடிக்கை உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரம் முஸ்லிம் சமூக மக்களிடையே கடும் கோபத்தை தூண்டியது மட்டுமல்லாமல், ‘ஐ லவ் முஹமது’ என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரத்தில், ‘ஐ லவ் முஹமது’ என்ற பலகை வைத்ததற்காக வழக்குப்பதிவு செய்யவில்லை, அதற்கென இடத்தில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் பலகை வைத்ததற்காகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது என போலீசார் விளக்கம் அளித்தனர். இருப்பினும், போலீசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாவட்ட நீதிபதி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் செல்ல உள்ளூர் முஸ்லிம் மதகுருவான மெளலானா தெளகீர் ரசா கான் அழைப்பு விடுத்தார். அதன் பேரில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ‘ஐ லவ் முஹமது’ என்ற பதாகையை ஏந்தி முஸ்லிம் மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி வாகனங்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது பேரணியை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது.

இந்த கலவரத்திற்கு மெளலானா தெளகீர் ரசா கான் தான் முக்கியக் காரணம் என்று கூறி அவரோடு 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாமல் அதற்கு அண்டை மாநிலங்களான உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களிலும் பரவி எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அங்கும், ‘ஐ லவ் முஹமது’ என்ற பதாகைகளுடன் முஸ்லிம் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு போட்டியாக ‘ஐ லவ் ராம்’, ‘ஐ லவ் மகாதேவ்’, ‘ஐ லவ் கணேஷ்’ போன்ற பதாகைகளுடன் இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், வட மாநிலங்களில் உள்ள இடங்களில் இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறை காரணமாக வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இதனால் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, பீகார் போன்ற வட மாநிலங்களில் பதற்றம் நீடித்து வருகின்றது. 

Advertisment