தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் ஆளும்கட்சி பேரூராட்சி செயலாளரை சேர்மன் கணவரும், ரவுடியும் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சி கழகத்தின் செயலாளராக இருப்பவர் சீனுவாசன். பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வபாரதி மனோஜ்குமார். துணைத்தலைவராக இருப்பவர் மகேஸ்வரி சீனுவாசன். கடந்த 10 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றுக்காக புதுப்பாளையம் சென்ற கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ சரவணன், பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் குறித்தும், பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சேர்மன் கணவர் மனோஜ்குமாருக்கும், வைஸ்சேர்மனின் கணவரான பேரூராட்சி செயலாளர் சீனுவாசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தின்போது சீனுவாசனை, மனோஜ்குமார், அவரது சகோதரர்கள் மூர்த்தி, 5வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து வைஸ்சேர்மன் மகேஸ்வரி, புதுப்பாளையம் காவல்நிலையத்தில் என் கணவரை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர். இது ஆளும்கட்சி பிரச்சனை என்பதால் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தனர். இதுகுறித்து பேரூராட்சி செயலாளர் சீனுவாசன் நேரடியாக மா.செவும், அமைச்சருமான எ.வ.வேலுவை சந்தித்து முறையிட்டதும், விவரத்தை கேட்டவர், கட்சியின் பேரூராட்சி செயலாளரை எப்படி ஒருவர் தாக்கலாம்? அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யச்சொல்லுங்கள் எனச்சொன்னதாக கூறப்படுகிறது.

அதன்பின் புதுப்பாளையம் காவல்நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ், சேர்மனின் கணவர் மனோஜ்குமார், அவரின் உடன்பிறந்த சகோதரர்களான மூர்த்தி, ராஜீவ்காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் மூவரும் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளனர். வழக்கு பதிவு செய்து நான்கு நாளாகியும் இன்னமும் கைது செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து விவரம் பெற பேரூராட்சி செயலாளர் சீனுவாசனை பலமுறை தொடர்புக்கொண்டும் நமது லைனை எடுக்கவில்லை.அங்கிருந்தவர்களோ, பேரூராட்சி அலுவலகத்திலிருந்து எம்.எல்.ஏ கார் ஏறிப்போனபின்பு, வெளியே பேரூராட்சி செயலாளர் சீனுவாசனிடம், சேர்மனின் கணவர் மனோஜ்குமார் அவரது தம்பி மூர்த்தி ஆகியோர். நீ மட்டும் தான் இங்க கட்சி வேலை பார்க்கற மாதிரி சொல்ற என கோபமா கேட்டார். இது கட்சி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் செய்யற கட்சிப்பணி. அமைச்சர் எங்களுக்கு என்ன வேலை செய்யனம்னு சொன்னாரோ, அதை செய்துக்கிட்டு இருக்கறதைப்பத்தி எம்.எல்.ஏக்கிட்ட சொல்றன். நான் உன்னைப்பத்தியோ, சேர்மன் பத்தி ஏதாவது சொன்னனா? நீ ஏன் எங்கிட்ட சொல்ல அப்படின்னு கேட்கற எனக்கேட்டதுமே, எங்களையே எதிர்த்து பேசுறியா ன்னை ஒழிச்சிடுவன், கை கால் உடைச்சிடுவன்னு ராஜ்குமார் மிரட்டறார். அவரோட சகோதரர் மூர்த்தி, சீனுவாசனை அவரது மனைவியின் கண் முன்பே தாக்கினார் என்கிறார்கள் சம்பவத்தை பார்த்தவர்கள்.

நாம் இவ்விவகாரம் குறித்து புதுப்பாளையம் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவுக்கு அழைத்துவரப்பட்டு உறுப்பினராகவே இல்லாதவரை உள்ளாட்சி தேர்தலில் நிற்கவைத்து திமுகவின் பலத்தால் சேர்மனாக்கினார்கள். பேரூராட்சியிலுள்ள 11 வார்டுகளில் அடிப்படை வசதிகள் பெரும்பாலும் எதுவும் செய்யவில்லை, இதுகுறித்து கவுன்சிலர்கள் யாரும் கேள்வி கேட்ககூடாது என மிரட்டுகிறார்கள், இதனால் யாரும் கேள்வி கேட்பதில்லை. காவல்துறையின் ரவுடி பட்டியலில் சில மாதங்களுக்கு முன்புவரை பெயர் இருந்த மனோஜ்குமாரின் சகோதரர் மூர்த்தி உட்பட உறவினர்கள் தான் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரம் செய்கிறார்கள். இது இங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். ஏதாவது கேள்வி கேட்டால் நாங்கள் பட்டியலின சமூகம் அதனால் ஒடுக்குகிறார்கள் எனச்சொல்வது, கேள்வி கேட்பவரை மிரட்டுவதால் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரும் கேள்வி கேட்பதில்லை, இது இவர்களுக்கு சாதகமாகிவிட்டது.

கடந்த வருடம் பேரூராட்சி ஊழியர் ஒருவரை சேர்மனின் கணவர் மனோஜ்குமார் தப்பு செய்ததற்காக விசாரிக்கிறேன் என்கிற பெயரில் மிரட்டினார். அவர் இவரின் காலில் விழச்செய்தார், அப்படியும் அவரை மிரட்டியதால் துப்புரவு பணியாளர்கள் காவல்நிலையத்தில் புகார் தந்துவிட்டு சாலைமறியல், போராட்டம் என செய்தனர். சேர்மனின் கணவருக்கு பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரம் செலுத்த யார் அதிகாரம் தந்தது என அலுவலர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆளும்கட்சி பெயர் டேமேஜ்ஜாகிறது என சமாதானம் செய்தார்கள். இப்போது கட்சியின் பேரூராட்சி செயலாளரையே தாக்கியுள்ளார்கள். இப்போதும் ரவுடியாக செயல்படும் சேர்மன் கணவரை அவரது ரவுடி தம்பியை கட்சி நிர்வாகிகள் சிலர் காப்பாற்றுகிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான பேரூராட்சி செயலாளர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர், அவர்களும் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தேர்தல் களத்தை பாதிப்பை ஏற்படுத்தாது. 

இன்று பேரூராட்சி செயலாளரை தாக்கியவர் நாளை எம்.எல்.ஏவை, மா.செவை தாக்கினாலும் அவருக்கு இப்படித்தான் சப்போட் செய்து காப்பாற்றுவார்களா? கட்சி நிர்வாகிக்கே இதுதான் நிலை என்றால் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டனின் நிலை? என அப்பகுதி மக்கள் பேசி வருகிறார்கள்.