சமீபகாலமாக அதிவேக பைக்குகளால் ஏராளமான இளைஞர்களின் உயிர்களை இழந்து தவிக்கிறது குடும்பங்கள். ஆனால் இன்னும் அதுபோன்ற பைக்குகளால் தினம் தினம் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.
அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அறந்தாங்கி எழில் நகர் சுரேஷ்பாபு, கடையாத்துப்பட்டி சௌந்தராஜன், குரும்பூர் மேடு பிரகாஷ் ஆகியோர் கல்லூரியில் படிக்கின்றனர்.
இன்று சௌந்தராஜன் தனது சகோதரர் பைக்கை ஓசி வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்றிருந்த நிலையில் மாலை வகுப்புகள் முடியும் முன்பே 3 மாணவர்களும் அந்த பைக்கில் அறந்தாங்கி நோக்கி சென்றுள்ளனர். பைக்கை சுரேஷ்பாபு அதிவேகமாக ஓட்டிய நிலையில் நானாகுடி வளைவில் அதிவேகமாக வந்ததால் பைக்கை நிலைநிறுத்த முடியாமல் போகவே எதியே வந்த வாகத்தில் மோதிய சம்பவத்தில் பைக் உடைந்து தூக்கி வீசப்பட்ட சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற இருவரும் படுகாயங்களுடன் கிடக்க அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிரிழந்த சுரேஷ்பாபு உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சம்பவம் குறித்து ஆவுடையார்கோயில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, 'இளைஞர்களை குறிவைத்து அதிவேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகள் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்குகளில் அதிவேகமாக செல்வதை இளைஞர்கள் ரொம்பவே ரசிக்கின்றனர். ஆனால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் நடப்பதையும் உணரவில்லை.
சாதாரண கூலி வேலை செய்யும் பெற்றோர்களை உயிர் பயம் காட்டி மிரட்டியே பல இளைஞர்கள், மாணவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி பைக் வாங்கி ஓட்டி பாதிக்கப்படுவது வேதனையாக உள்ளது. போலீசாரும் வேகமாக செல்லும் வாகனங்களை நிறுத்தினால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் சோதனைகளைக் கூடச் செய்வதில்லை. அதனால் தான் இப்படி வாழவேண்டிய இளைஞர்களை இழந்து நிற்கிறோம். இது மாவட்டம் முழுவதும் நடக்கிறது. அடிக்கடி ரேஸ் வைக்கிறார்கள் என்கின்றனர். இந்த விபத்து சம்பவத்தையடுத்து மாவட்ட காவல் நிர்வாகம் இனி வரும் காலங்களில் கல்லூரி நாட்களில் கல்லூரிக்கு 100 மீ தூரத்தில் வாரத்தில் 2 நாட்கள் வாகன தணிக்கை செய்து லைசன்ஸ், ஆவணங்கள் இல்லாத பைக்குகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தினால் பல உயிர்களை காப்பாற்றலாம்.