சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி வருகிறது தமிழக நெடுஞ்சாலைத் துறை. இந்த பாலம் விரைவில் திறக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவும் சிவாஜி சமூக நல பேரவையும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
இது குறித்து கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் கலைப்பிரிவு மற்றும் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன், "நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தமிழ்த்திரையுலகின் தூணாக, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தன் தனிச் சிறப்பு வாய்ந்த நடிப்பின் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள் ஆகியோரை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன்.
தற்போது சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர் மட்ட மேம்பாலத்திற்கு சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தன் கலைத்திறனால் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகத் திகழ்ந்தவரும், கலைஞரின் நண்பராகத் திகழ்ந்தவருமான கர்திலகம் சிவாஜி கணேசன் தன் குடும்பத்தினருடன் இறுதிகாலம் வரை வாழ்ந்த இடம், சென்னை, தேனாம்பேட்டை சந்திப்பு அருகிலுள்ள தெற்கு போக் சாலை என்று முன்பு அழைக்கப்பட்டு, தற்போது செவாலியே சிவாஜிகணேசன் சாலை என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள அன்னை இல்லத்தில்தான். எனவே சிவாஜி வசித்த இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டுவரும் பாலத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்படுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.
தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தவேண்டும் என்று சிவாஜியின் லட்சோபலட்ச ரசிகர்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய கோரிக்கையை தாங்கள் ஏற்று, பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். இந்த கோரிக்கை கடிதம், முதல்வரின் தனிப் பிரிவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/si-2025-12-29-14-44-41.jpg)