தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/28/a4582-2025-07-28-20-12-57.jpg)
இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மறைந்த மன்னர் குமரன் சேதுபதியின் மகன் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அண்மையாகவே அதிமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாகேந்திரன் சேதுபதி கலந்துகொண்டு ஆர்வம் காட்டிய நிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் ராமநாதபுரம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.