மூதாட்டியை கொலை செய்து இரும்புப் பெட்டிக்குள் அடைத்து வைத்து பூட்டிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் வீ காட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (75) என்ற மூதாட்டி. இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அவர் தனியாக குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் சின்னப்பொண்ணு காணாமல் போயுள்ளார். அவருடைய வீடு பூட்டியிருந்த நிலையில் அவருடைய மகன்கள்மற்றும் உறவினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (30-12-25) சின்னப்பொண்ணுவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர், அங்கு வந்து வீட்டை உடைத்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த இரும்புப்பெட்டியில் சின்னப்பொண்ணு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், சின்னப்பொண்ணுவை அவரது பேரன் தான் அடித்து கொலை செய்து இரும்புப்பெட்டியில் அடைத்து பூட்டி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி மூத்த மகன் வழி பேரனான ராஜப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ராஜப்பன், சின்னப்பொண்ணுவிடம் செலவுக்கு அடிக்கடி பணம் வாங்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, கடந்த 27ஆம் தேதி வழக்கம் போல் பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜப்பன், சின்னப்பொண்ணுவை அடித்து கொலை செய்து பெட்டிக்குள் வைத்து பூட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment