தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட சமயங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியில் அக்.18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் மொத்தம் 790 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அத்துறையின் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமியிடம் டாஸ்மாக்கில் தீபாவளி நேரங்களில் கூடுதல் மது விற்பனை ஆவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், ''கூடுதல் நடவடிக்கை எடுத்துக்கொண்டு டாஸ்மாக்கில் எந்த வேலையும் செய்யவில்லை. இது தானாக ஒவ்வொரு ஆண்டும் விற்பனை கூடுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்ற விஷயம். கடைசி வருடம் எடுத்து பார்த்தால் போன வருடத்தை விட கூடுதலாக இருக்கும். அதற்கு முந்தைய வருடம் எடுத்துக் கொண்டால் அதற்கு அடுத்த வருடம் கூடுதலாக இருக்கும். அந்த மாதிரி இருந்திருக்கும். அரசாங்கம் இதற்காக தனி முயற்சி எடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் படிப்படியாக மதுவிற்பனையை குறைத்துக் கொண்டு தான் வருகிறோம்'' என்றார்.