புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி நகரம் தொடங்கி சுற்றியுள்ள கிராமங்களில் மணல் திருட்டில் தொடங்கி, கோயில் உண்டியல்கள், பைக்கள், கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை என கடந்த சில மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்து இதுவரை யாரும் பிடிபடாததால் தினம் தினம் திருட்டுச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளது.

Advertisment

a5530
pudukottai Photograph: (cctv)

நேற்று புதன்கிழமை அதிகாலை அறந்தாங்கி தாலுகா ஆபீஸ் ரோட்டில் உள்ள லெட்சுமி ஸ்டோர்ஸ் பெண்களுக்கான தையல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பூட்டை உடைத்து ரூ.1.65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக கடை உரிமையாளர் சிசிடிவி பதிவுகளுடன் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதே கடை அருகே ஒரு மருந்துக்கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதேபோல நகரில் கடந்த 3 மாதத்தில் 10 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அறந்தாங்கி காவல் சரகம் ஆவணத்தான்கோட்டை அருகே உள்ள மாளிகைப்புஞ்சை எனும் கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி, காசு, மணி உட்பட சுமார் 4 பவுன் தங்க நகைகள், வெள்ளி விளக்குகள், வெண்கல குத்து விளக்குகள், தாம்பூலங்கள், ஆம்பிளிபயர் என ஏராளமான பொருட்களை திருடிய மர்ம நபர்கள் கோவில் உண்டியலையும் உடைத்து காசு, பணத்தையும் அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோயில் பூசாரி மெய்யப்பன் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது கடந்த சில மாதங்களில் அறந்தாங்கி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோயிலில் காவலர் இருக்கும் போதே பெரிய உண்டியலை உடைத்துத் தூக்கிச் சென்று மூக்குடியில் வீசிச் சென்றனர். அதேபோல நாகுடி, கூத்தாடிவயல் என பல கிராமங்களிலும் கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. மேலும், கீரமங்கலம் காவல் சரகத்தில், வேம்பங்குடி மேற்கு, நகரம், கொத்தமங்கலம் ஆகிய கிராமங்களில் 10 க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டுகள் குறித்து புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் தொடர்ந்து திருட்டுகள் நடக்கிறது. மேலும் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மேலும் திருட்டுகள் அதிகரிக்கலாம் என்கின்றனர்

Advertisment