சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''தமிழக முதல்வரின் சிந்தையில் உதித்த பல்வேறு புதிய புதிய திட்டங்களால் இன்று ஆன்மீகவாதிகள் போகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. இதனால்தான் நாலாபுறமும் இருந்து ஈட்டி முனைத் தாக்குதல்கள் இந்த ஆட்சியின் மீது ஏற்படுத்தப்படுகின்றது.

Advertisment

திட்டமிட்டு சங்கிகள் அறையில் உட்கார்ந்து தீட்டுகின்ற திட்டங்களுக்கு ஏற்ப நீதிமன்றங்களின் நெடிய வாசல்களை தேடுகின்றனர். எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு பக்க துணையாக இருப்பதால் அனைத்து வழக்குகளிலும் எங்களுடைய நடுநிலையான நியாயத்தை எடுத்துக் கூறி வெல்வோம்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்திய இரண்டாவது மாநாட்டில் விஜய் திமுக மீது வைத்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''விஜய் இரண்டு மாநாடுகளை முடித்திருக்கிறார்.  நரியின் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்..  ராஜா வேஷம் களஞ்சி போச்சு டும் டும் டும்... என்பது போல் அனைத்து விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார்.

இன்னும் இரண்டு மூன்று மாநாடுகள் நடத்தினாலே பெருங்காய டப்பா போல் விஜய் காலி ஆகிவிடுவார் என்பது என்னுடைய கருத்து. தமிழக முதல்வரின் புகழ் கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது. இன்றுகூட சின்னஞ்சிறு மழலைகள், பள்ளி செல்வங்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் இந்த திட்டத்தை உடனடியாக எங்களுடைய அமைச்சரவையைக் கூட்டி இந்த திட்டத்தை கொண்டு வருவேன் என்று சொல்லி இருக்கிறார். திமுக அரசு ஒன்றியத்திற்கு மட்டுமல்ல உலகத்துக்கே திட்டங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது. மற்றவர்களின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களும் பதிலளிக்க நாங்கள் விரும்பவில்லை. 2026 களத்தை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். வரட்டும் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றவர்களை களத்தில் சந்திப்போம்''என்றார்.