கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று 17-09-25 மாலை, 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

Advertisment

விழாவில் கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி ஆகியவற்றில் கழகப் பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கி, விழா பேரூரை ஆற்றுகிறார்.

நிகழ்வில் துணை முதல்வரும், கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும்,  கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு, முதன்மை செயலாளர் கேஎன் நேரு, , துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.விழாவில் இரண்டு லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில்  கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம்பி கனிமொழிக்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவரும், தணிக்கை குழு முன்னாள் உறுப்பினருமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருதும், அண்ணாநகர் முன்னாள் பகுதி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்படுகின்றன.

Advertisment

மேலும், கட்சியின் மூத்த முன்னோடி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நினைவில் வாழும் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், கட்சியின் ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், சட்டமன்ற முன்னாள் கொறாடவுமான மருதுார் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலுார் நா. பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் விருதும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருக்கைகளில் திண்பண்டங்கள் உள்ளடக்கிய பை வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பையில் மைசூர்பாகு, மிக்சர், பிஸ்கட் பாக்கெட், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில், டிஷ்யூ பேப்பர் முதலியவை உள்ளன.