பொங்கல் பரிசளிப்பு விழாவில் தவெக நிர்வாகி அருண்ராஜ் அரசியல் பேசியபோது விழா கமிட்டியினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்னபாவடை தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மேடையில் பேசினார்.

Advertisment

அதில் அவர், “உங்கள் எல்லோருக்கும் தவெக தலைவர் விஜய்யை பிடிக்கும் தானே. நடிகர் விஜய்யாக இருந்ததை விட இப்போது அரசியல் கட்சி ஆர்ம்பித்த பிறகு அவருக்கு இன்னும் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். காரணம் ஒன்னே ஒன்னு தான், 50 வருடங்களாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏதாவது வாழ்க்கையில் மாறி இருக்கிறதா? எங்கே பார்த்தாலும் ஊழல் நடக்கிறது. இவ்வளவு வருஷம் நம் அரசாங்கம் எதற்கு நடக்கிறது. நீங்கள் நானும் எல்லோரும் சேர்ந்து கட்டுகிற வரி பணத்தில் அரசாங்கம் நடக்கிறது. அது முறையாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்றால் அது இல்லை. இப்போது தலைவர் எதற்காக கட்சி ஆரம்பித்திருக்கிறார்? பணம், புகழ், பேர் எல்லாம் கொடுத்த மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வந்திருக்கிறார்” என்று பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த விழா கமிட்டியின் ஒருவர், “பொங்கல் பற்றி மட்டும் பேசுங்கள், வேற எதை பற்றியும் பேசக்கூடாது. இங்கே தலைவர் நான் தான், இந்த மேடைக்கு தலைவர் நான் தான். அதனால் பொங்கல் பற்றி மட்டும் பேசுங்கள், வேறு எதை பற்றியும் பேசக்கூடாது” என்று கோபப்பட்டு கூறினார். இதையடுத்து அருண்ராஜ், “மீண்டும் ஒருமுறை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகவும் தலைவர் சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார். 

Advertisment