தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
எப்படியாவது திமுகவை அகற்றிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக தலைமை பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. செல்லும் இடமெல்லாம் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் திமுகவை சாடி வருகின்றனர். அதேசமயம் தேர்தல் நேரத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தூசிதட்டி அவர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க அமித்ஷா காய் நகர்த்தி வருகிறாராம். அதற்கு தூபம் போடுவது போல், அதிமுக பொதுகுழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போது நகராட்சித் துறை ஊழலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில் முதலாவதாக ஒருவர் உள்ளே போகப் போகிறார். திமுகவினர் படிப்படியாக சிறைக்கு போவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது. அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்” என்று பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின், “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோவையில் உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த போஸ்டர்களில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை கிண்டல் செய்யும் வகையில் “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்” என எழுதப்பட்டுள்ளது. போஸ்டரில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை திமுக நிர்வாகிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த போஸ்டர்களுக்கு பாஜக கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தற்போது அரசியல் களம் மேலும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது.
Follow Us