tvk vijay Photograph: (stalin)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்று (13/07/2025) போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனை ஒட்டி 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்ட மேடைக்கு விஜய் வந்த நிலையில் போராட்டமானது தொடங்கியது. காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மேடையில் இருந்தனர். கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ''திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் ஒரு சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர். அந்த சாதாரண குடும்பத்திற்கு நடந்த அந்த கொடுமைக்கு சிஎம் சாரி சொன்னார். தப்பில்லை இப்போ அதோடு சேர்த்து இதையும் கொஞ்சம் பண்ணிடுங்க சிஎம் சார். உங்களுடைய ஆட்சி காலத்தில் இதேபோன்று போலீஸ் விசாரணையில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த 24 பேரோட குடும்பத்திற்கும் நீங்க சாரி சொன்னீங்களா? தயவுசெய்து சாரி சொல்லிடுங்க? அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்த மாதிரி இந்த 24 பேர் குடும்பத்திற்கும் நிவாரணம் கொடுத்தீர்களா? தயவு செய்து நிவாரணம் கொடுத்திருங்க.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றிய பிறகு இது தமிழகத்திற்கு அவமானம் என்று சொன்னீர்கள். இன்று நீங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு பேர் என்ன சார்? அன்று நீங்கள் சொன்னதும் இன்று நடப்பதும் அதே தானே. அதே சிபிஐ தானே. அதே ஆர்எஸ்எஸ் பிஜேபியோட கைக்கூலி தானே. ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள். ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அந்த பயம் தான் நீங்கள் ஒன்றியத்தோட ஆட்சிக்கு பின்னாடி ஒளிந்து கொள்வதற்கு காரணம். இன்னும் உங்களுடைய ஆட்சியில் எத்தனை அட்ராசிட்டிஸ். அண்ணா யுனிவர்சிட்டி சம்பவத்திலிருந்து இன்று அஜித் குமார் சம்பவம் வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றால் அப்புறம் நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதற்கு சார்? நீங்க வச்சிருக்கு சிஎம் பதவி எதுக்கு சார்? எப்படி கேள்வி கேட்டாலும் எந்த பதிலும் வரப்போவதில்லை. ஏனென்றால் இருந்தால்தானே வரும். மேக்ஸிமம் உங்களிடம் இருந்து வரும் பதில் 'சாரிம்மா தெரியாம நடந்திருச்சும்மா, நடக்கக்கூடாதது நடந்திருச்சும்மா' அவ்வளவுதானே. வெட்டி விளம்பர திமுக மாடல் சர்க்கார் இப்பொழுது சாரிம்மா சர்க்கார் ஆயிடுச்சு. இந்த ஆட்சியை விட்டு இந்த அரசு போறதுக்குள்ள நீங்கள் செய்த எல்லா தப்புக்கும் பரிகாரமா சட்ட ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதற்கான அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும்'' என்றார்.