Advertisment

'ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை!'-அன்புமணி காட்டம்

085

'The DMK government read a lie in the name of the Governor's address!' - Anbumani Photograph: (pmk)

'ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டனவா? ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை' என பாமகவின் அன்புமணி கட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.12.16 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுனர் உரை என்ற பெயரில் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும்.

Advertisment

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதாகவும், அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. பல தருணங்களில் திமுக அரசின் இந்த பொய் முதலீடுகளை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1059  புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்து விட்டதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும்  திமுக அரசு பொய்கூறி வந்தது. ஆனால், இது பொய் என்றும், தமிழக அரசு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவான மதிப்பு கொண்ட முதலீடுகள், அதாவது வெறும் 8.80% முதலீடுகள் மட்டுமே வந்திருப்பதாகவும், அதிலும் பெரும்பாலானவை தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டத்திற்காக முதலீடு செய்தவை என்பதையும் திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பில் ஆவணமாக தயாரித்து கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன்.

அதுவரை 100% முதலீடும் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாக கூறிக் கொண்டிருந்த  தமிழக அரசு, வெறும் 23% புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டும் தான் முதலீடு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வணிக உற்பத்தி தொடங்கப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டது. 23% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெற்றிருப்பதாக அரசு கூறினாலும் கூட, அவற்றில் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளில் முதல்கட்டமாக சிறிய பங்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருப்பதால் மொத்த முதலீட்டின் அளவு ரூ. 1 லட்சம் கோடியை, அதாவது 8.80 விழுக்காட்டைத் தாண்டவில்லை என்பது தான் உண்மை.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, இன்னும் கேட்டால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு  செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்  மதிப்பையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தின் அளவான 8.80 விழுக்காட்டை விட குறைந்து 8.20 விழுக்காடாகி விட்ட நிலையில், மொத்த முதலீடும் வந்து விட்டது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடியை மக்கள் நம்ப மாட்டார்கள்.

அதேபோல், திமுக அரசின் 7000 மெகாவாட் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், 2640 மெகாவாட் மின் திட்டங்கள் உற்பத்தியை தொடங்குவதற்கு தயார் நிலையில்  இருப்பதாகவும் இன்னொரு பொய்யை திமுக அரசு கூறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரே ஒரு அனல் மின் திட்டத்திற்குக் கூட அடிக்கல் நாட்டப் படவில்லை; ஒரே ஒரு புதிய மின்னுற்பத்தி நிலையம் கூட உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது தான் உண்மையாகும். ஆனால், மீண்டும், மீண்டும் பொய்களை அடுக்குவதன் மூலம் மக்களை நம்ப வைத்து விட முடியும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை திமுக அரசு செய்து வருகிறது. இம்முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.

ஆளுநர் உரை என்பது அரசின் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்னும் சில வாரங்களில் வீட்டுக்கு அனுப்பப்படவிருக்கும் திமுக அரசால் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. கடந்த காலங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதால் அவற்றையும் கூறவில்லை. அதனால்  தான் ஆளுநர் உரையிலும் பொய் மூட்டைகளை  திமுக அரசு அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்களை மட்டுமே முதலீடாக வைத்து  ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்' என தெரிவித்துள்ளார்.

dmk governor pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe