The District Education Officer personally inspected ITI HOSTEL Photograph: (MADURAI)
மதுரை திருமங்கலத்தில் ஐடிஐ விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் இருக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ளது செக்கானூரணி என்ற பகுதி. இங்கு தொழிற்பயிற்சி கல்விக்கான ஐடிஐ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கேயே விடுதியும் அமைந்துள்ளது. இந்நிலையில் விடுதியில் இருந்த மாணவன் ஒருவருடன் உடன் தங்கி இருந்த சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்குவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் மாணவனை நிர்வாணப்படுத்தி காலணியைக் கொண்டு தாக்கி துன்புறுத்துவது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இது ராக்கிங் சம்பவமா அல்லது பாலியல் வன்கொடுமை சம்பவமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விடுதியின் காப்பாளர் மீதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி ஜவஹர் சம்பவம் நடந்த விடுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.