தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழி பகுதியில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு கடந்த மாதம் 8 ஆம் தேதி பாபநாசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் குடும்பத்தாருடன் சாமி கும்பிடு சென்றுள்ளார். அப்பொழுது கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக தனியாக சென்ற சிறுமி, ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் உள்ளே தேடிச் சென்றனர்.
அப்போது அழுது கொண்டே திரும்பி வெளியே வந்தார் என்று கூறப்படுகிறது. வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். உடனடியாக பெற்றோர் தரப்பு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விஸ்வநாதன் என்ற 75 வயது முதிய அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.