தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கானப் பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது திமுக. இந்த நிலையில், திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, திருவண்ணாமலை கலைஞர் திடலில், நாளை (14-12-2025) மிகப் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. சுமார் 1.30 இலட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். 5000-க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் வாகனங்களையும் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் திமுக கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களைக் குறிவைத்து இயங்கி வருகிறது. அரசு சார்பில் நலத்திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்துவதுடன், கட்சி ரீதியாகவும் இளைஞர் அணியைப் பலப்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சுமார் 5 இலட்சம் இளைஞரணி நிர்வாகிகளைப் நியமித்திருக்கிறது திமுக. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சராசரியாக 1300 இளைஞரணி நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நிர்வாகக் கட்டமைப்பை இளைஞர்களை மட்டுமே கொண்டு அமைத்திருக்கும் அரசியல் கட்சி இந்தியாவில் வேறு எதுவும் இல்லை. பாஜக போன்ற தேசியக் கட்சிகளுக்குக் கூட இது கடினம்.

Advertisment

இளைஞர் அணியை ஒருங்கிணைப்பதில் முதல் கட்டமாக நடக்கும் வடக்கு மண்டல நிர்வாகிகளின்
இந்தச் சந்திப்பில், 29 கட்சி நிர்வாக மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,30,329 கிளை-வார்டு-பாக நிர்வாகிகள் (தொண்டர்கள் அல்ல) கலந்துகொள்கின்றனர். ஆயிரக்கணக்கில் தொண்டர்களைச் சேர்ப்பதற்கே மற்ற கட்சிகள் திணறும் நிலையில், திமுக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகளை மட்டும் ஒருங்கிணைக்கிறது. இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இதற்காக 135 ஏக்கர் அளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது, இங்கு 5000-க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் வாகனங்களையும் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தரும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

நிகழ்ச்சியில் திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றை, விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், கழக முன்னோடிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறுகின்றன. மேலும், கழக இளைஞர் அணியின் 45 ஆண்டு காலப் பயணத்தை விளக்கும் புகைப்படங்களின் அணிவகுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. 

வாசிப்பைக் கடத்தும் நோக்கில், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ உட்பட 27 புத்தகங்கள் அடங்கிய முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது, இங்கு 10% தள்ளுபடி விலையில் புத்தகங்களைப் பெறலாம்.

சந்திப்பில், திமுகவின் சிறப்பை விவரிக்கும் 'தொடரும் திராவிடம்' மேடை நாடகம் நடத்தப்படுகிறது. எஸ்ஐஆர் பணிகள் குறித்து மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினரும் கழகச் சட்டத்துறை செயலாளருமான என். ஆர். இளங்கோவும், சமூக ஊடகத்தின்  அவசியம் குறித்து கழகச் செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியும் விளக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான அ. இராசா இளைஞர் அணியின் பணிகள் மற்றும் கழக வரலாறு குறித்து புதிய ‘திராவிடியன் ஸ்டாக்’குகளுக்கு எடுத்துரைப்பார்.

இளைஞரணி நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதன் விளைவாக, இவர்கள் எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது களத்தில் நின்று பொதுமக்களுக்கும், பிஎல்ஓக்களுக்கும் உதவினர்; அடுத்து வரைவு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கத் தயாராகி வருகின்றனர். திமுகவின் இந்த இளைஞர் படை, வருகிற தேர்தலுக்கு வாக்களிக்கக் கூடியவர்களை மட்டுமல்லாமல், தொலைநோக்குச் சிந்தனையோடு நெடுங்காலம் பயணிக்கவிருக்கும் இளைஞர்களை உருவாக்கிக் கொண்டிருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.