தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கான்கிரீட் சிமெண்ட் தூண் கல் விழுந்து நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசித்து வருபவர்கள் கோபாலகிருஷ்ணன்-அன்னலட்சுமி தம்பதி. இவர்களுக்கு அஜிதா ஸ்ரீ என்ற நான்கு வயது பெண் குழந்தை இருந்தது. வழக்கம் போல கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டின் அருகே குழந்தை அஜிதா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார்.
வீட்டுக்கு அருகே வேலுச்சாமி என்பவர் ஆட்டுக் கொட்டகை அமைப்பதற்காக இரண்டு சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நட்டிருந்தார். அதில் கயிறு கட்டி துணிகள் மற்றும் போர்வை காய வைக்கப்பட்டு இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அஜிதா ஸ்ரீ அந்த போர்வையை இழுத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென சிமெண்ட் கல் அஜிதா ஸ்ரீ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தையின் தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுமி அஜிதா ஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.