கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023 இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்து வருகிறது.

Advertisment

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். அதில், 'அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது. எந்த அரசியல் கட்சியிடமும் பாரபட்சத்துடன் செயல்படுவது இல்லை. தேர்தலையும் பாரபட்சமாக நடத்துவது இல்லை. தேர்தல் ஆணையம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. வாக்குகள் திருடப்பட்டது என்று புகார் கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

சிலர் வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் சீராய்வு தேவை என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. வாக்குத்திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்புக்கு அவமதிப்பு ஏற்படுத்துகின்றன. தவறான சொற்களைப் பயன்படுத்தி பொதுமக்களை திசைத் திருப்பும் முயற்சிகள் நடைபெறுகிறது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த விவாகரத்திலும் பொய்கள் பரப்பப்படுகின்றன. சிலர் பொய்களையும் மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர். வாக்குத்திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் ஒருபோதும் அஞ்சாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.