'The Cm Minister will not go to that level...' - Appavu Sensational Interview Photograph: (dmk)
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் பேரவைக் கூட்டத்திற்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அப்பாவு,''யார் என்ன நினைத்தாலும், என்ன சொன்னாலும் நம்முடைய முதல்வர் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நடப்பார். பல மாநிலங்களில் ஆளுநரைக் கூப்பிடாமலே சட்டமன்றத்தை கூட்டுவார்கள். ஆனால் நம்முடைய முதல்வர் அவர்கள் ஒருபோதும் அந்த நிலைக்குப் போக மாட்டார். இந்த ஆண்டும் சட்டமன்ற கூட்டத்திற்கு ஆளுநரைச் சந்தித்து நாங்கள் அழைப்போம். அவர் வருவார் என்று முழுமையாக நம்புகிறோம். கடந்த காலங்களில் நடந்தது போன்று நடக்காமல் இருக்கும் என நம்புகிறோம். நல்லதே நடக்கும். மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் ஆளுநர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்களோ அதேபோல் அவர் எழுதிக் கொடுத்த உரையை வாசிப்பார் என நம்புகிறோம்.
அதோடு நாங்கள் நிறைவேற்றி கொடுக்கக்கூடிய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மகாத்மா காந்தி பெயரை நீக்க எப்படி 12 மணி நேரத்துக்குள் அனுமதி அளித்தார்களோ அதுபோல் நமக்கும் ஆளுநர் அனுமதி அளிப்பார் என நம்புகிறோம். கிட்டத்தட்ட நம்முடைய இந்திய திருநாட்டில் கலைஞரும் மன்மோகன் சிங்கும் இருந்த கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார்கள். காங்கிரசும் திமுகவும் கொண்டு வந்தார்கள் என்ற கோபத்திலே பார்த்துகிட்டு இருந்தால் என்ன நியாயம். அது நியாயம் இல்லை. நம்முடைய தேசப் பிதா மகாத்மா காந்தி பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன? இதே ஆர்எஸ்எஸ் தான் சதி செய்து மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30ல சுட்டு கொன்னாங்க. அவர்கள் இப்போது ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு காந்தி பெயரை எப்படி வைப்பார்கள் எனச் சொல்கிறார்கள். இது நாட்டு மக்கள் தான் முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
100 நாள் வேலைத்திட்டத்தில் இந்திய அளவில் ஆண்டுக்கு 91,000 கோடி ரூபாய் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி செலவிடப்பட்டு அதன் மூலம் 42 கோடி பேர்கள் பயன்பெற்றார்கள். நமது மாநிலத்திற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வரும். இந்த பத்தாயிரம் கோடியை ஆறாயிரம் கோடியாக மாற்றிவிட்டு வரவேறங்க வேண்டும் எனச் சொன்னால் யார் வரவேற்பார்கள். நீங்களே சொல்லுங்க'' என்றார்.
Follow Us