2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் கூடியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து கலைஞர் சம்பந்தமான ஒரு புத்தகத்தை கொடுத்து வரவேற்பு அளித்தார். அவரை தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மலர் கொடுத்து புத்தகத்தை பரிசாக வழங்கி வரவேற்றார்.

Advertisment

அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், சட்டப்பேரவை மரபை சபாநாயகர் அப்பாவு எடுத்து கூறிய போது அதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை சட்டமன்றத்தில் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பேரவையை இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். அப்போது அவர், “மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்க வேண்டும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கோ அல்லது மாநில அரசு வழங்கப்பட்ட உரையை நீக்கம் செய்வதற்கோ அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையில் ஆளுநர் வேண்டுமென்றே அரசியலமைப்பு சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்துள்ளார். ஆளுநரின் இந்த செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவமதிக்கும் செயலாகும். கடந்த 2023 ஜனவரி 10 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நான் இங்கே நினைவு கூற விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும் அதை முத்தமிழறிஞர் கலைஞர் வழிமொழிந்த போதிலும் அந்த பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியை பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மி அளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை என்று நான் அன்றைக்கு எடுத்துரைத்தேன்.

அந்த கொள்கை ஒட்டியே ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க நான் ஆணையிட்டேன். எனினும் ஆளுநர் ஏற்கெனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தக்குரியது. தமிழ்நாடு சட்டமன்றம் எட்டரை கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பு உடையவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசிலமைப்பு சட்டமும் அந்த பதவி வகிப்பவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அதற்கு மாறாக செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும் பொது மேடைகளில் அரசியல் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகையை முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையது அல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி சீரும் சிறப்போடும் இயங்குகின்ற பேரவையின் புகழ் மங்கிடாத வகையில், பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினை பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 

Advertisment

வரலாற்று பெருமை கொண்ட பேரவையின் மான்பினை, பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால் 
கீழ்காணும் தீர்மானத்தை மாநில பேரவை தலைவர்களின் இசைவோடு சட்டமன்ற பேரவை விதிகளை தளர்த்தி முன்மொழிந்திட அனுமதி கூறுகிறேன். ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி
வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் ஆளுநர் சென்று வருவதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே ஆளுநரால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது. அவ்வாறே அவை குறிப்பில் நடவடிக்கை குறிப்புகள் இடம்பெறலாம். மேலும் மரபு வழி நிகழ்வுகள் மாநில பேரவை தலைவரால் படைக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம் அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கை குறிப்பு இடம்பெறலாம் எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன். இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருவனதாக நிறைவேற்றி தரவேண்டி அமர்கிறேன்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரையை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதுல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனை கடந்து விட முடியாது” என்று கூறினார்.