Advertisment

“மதக்கலவரம் நடக்காமல் சக்கர வியூகத்தை உருவாக்கியவர் முதலமைச்சர்” - அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

sekarbabu

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு  இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசியதாவது" முதலமைச்சரின் சிந்தையில் உதித்த பக்தர் நலன் பயக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ராமநாத சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் - காசி பயணம்' வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (06-12-2025)  காலை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக காசிக்கு 602 பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நாளை இரவு காசி சென்றடையும் இப்பயணிகள் டிசம்பர் 12 அன்று காலை திரும்பி வருவார்கள்.

Advertisment

இப்பயணிகளின் பாதுகாப்பிற்காக இணை ஆணையர் ஒருவர், 5 உதவி ஆணையர்கள், 45 துறை அலுவலர்கள், 2 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு போர்வை, பற்பசை, தேங்காய் எண்ணெய், தலைவாரும் சீப்பு உட்பட 18 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ஆகும் செலவு ரூ.27,500 ஆகும். இத்திட்டத்திற்கு மட்டும் தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது.

ராமேஸ்வரம் - காசி பயணத்தில் இன்றுவரை 1,520 பேர் பயனடைந்துள்ளனர். முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட 'ஆன்மீகப் பயணம்' திட்டத்தில் மொத்தம் 3,815 பேர் பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு   4 கோடி 64 லட்சம் ரூபாயை மானியம் வழங்கியுள்ளது.ஆடி மாத அம்மன் சுற்றுலா பயணத் திட்டதைச் சீரமைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் 3,004 சக்திகள் பயன்பெற்றனர். இதற்கான 75 லட்சம் ரூபாய் செலவை அரசே ஏற்றுள்ளது.புரட்டாசி மாத வைணவ திருக்கோயில் பயணத்திட்டத்தில் 314 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்திற்கும் 75 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, மூத்தோரின் மகிழ்ச்சியிலும் இறைவனைக் காணும் அரசாக நாங்கள் செயல்படுகிறோம்" என்றார் சேகர் பாபு. மேலும்,  "முக்திநாத் யாத்திரைக்கான மானியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது, 645 பக்தர்கள் பயன்பெற்ற இத்திட்டத்திற்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மானியம், மானசரோவர் பயண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டு கூடுதலாக 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது; ஆன்மீகப் பயணங்களின் ஒட்டுமொத்தமாக 11,998 பேர் பயனடைந்துள்ளனர், இதற்காக அரசு ஒதுக்கிய நிதி 11 கோடியே 13 இலட்சம் ரூபாயாகும்.

இந்த ஆட்சியில்தான் திருவிளக்கு பூஜை புனரமைக்கப்பட்டு, ஒவ்வொரு பௌர்ணமியிலும் 108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்கும் வகையில் தொடங்கப்பட்டது. பூஜை செலவில் 20% மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை 81,540 சுமங்கலிப் பெண்கள் இப்பூஜையில் பங்கேற்று வீடும் உள்ளமும் நலம்பெற பிரார்த்தித்துள்ளனர்.மொத்தமுள்ள 2064 கோயில் குளங்களில் 450 குளங்கள் ரூ.120 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. 4 புதிய குளங்கள் வெட்டப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. 700 திருக்கோயில் தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்த சேகர்பாபு,

"தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கிறது, சட்டப்பூர்வமாகவே செயல்படுகிறது. இன, மத மோதல்களைத் தடுப்பதே தமிழ்நாடு அரசின் குறிக்கோள். 1920, 1930, 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கேற்றப்படும் வழக்கமான இடத்திலேயே இந்நிகழ்வு நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது, சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை சனாதானம் என்பதல்ல இறைக்கொள்கை. வடக்கில் இதுபோன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்கியது போல் தமிழ்நாட்டில் உருவாக்கலாம் என்று நினைக்கின்றார்கள். இது ராமானுஜர் வாழ்ந்த மண், எல்லோருக்கும் எல்லாமுமான மண். அதோடு மட்டுமல்ல ஒரு காலத்தில் வல்லபாய் பட்டேலை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றுவார்கள் இன்றைக்கு இந்தியாவே உற்றுநோக்குகின்ற இரும்பு மனிதராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்; அவருடைய ஆட்சியில் பிரிவினை என்பது ஒருநாளும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

இது சட்டத்தின் ஆட்சி, சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன, இறுதிவரை இன,மத மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன முயற்சி வேண்டுமானாலும் இந்த அரசு எடுக்கும்; மாண்புமிகு முதலமைச்சர் சட்டப்படியான போராட்டத்தை நடத்தி மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவார்.இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகின்ற சூழ்நிலையை உருவாக்க நினைத்தார்கள் அது நடக்கவில்லை. அதை நடக்க விடாமல் தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர்  தமிழ்நாடு முதலமைச்சர்.

பிறப்பால் வேண்டுமென்றால் மதங்கள் பிரிக்கப்படலாம், ஆனால் வாழ்க்கை நெறிமுறைகளில் மதங்களைப் பிரிக்க கூடாது. ஒரு தாய் மக்களாக தமிழ்நாட்டு மக்கள், மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களின் குடையின் கீழ் நிற்பார்கள்.கடந்த கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை உள்ளிட்ட 66 கோயில்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்; மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்; நம் முன்னோர்களை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று பதிவிட்டு வரலாற்று ஆவணங்கள்  எப்படிசொல்லுகிறதோ அதேபோல் 100 ஆண்டுகள் அல்ல 500 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் 'மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சி உடைய நாயகன் எங்கள் உயிரினும் மேலான அன்பு தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்ற பெயர் பொருத்திய வரலாறு இருக்கும்.

அதிமுகவில் இப்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள் அத்தனையும் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் என்ன சொல்லுகிறாரோ அதற்கேற்ற வகையிலேதான் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொண்ட கொள்கைகளை அவர்கள் கொண்ட லட்சியங்களைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை 2014, 2017 ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சிதான் இருந்தது. அந்த ஆட்சியில் தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து இவர்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதை மறந்துவிட்டு இரண்டாம் இடத்திலும் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது, அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை பாரதிய ஜனதாவிடம் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டார்கள்" என்று அதிரடியாக  பதிலளித்தார் சேகர்பாபு.

minister sekar babu Tiruparankundram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe