இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போதுஅவர் பேசியதாவது" முதலமைச்சரின் சிந்தையில் உதித்த பக்தர் நலன் பயக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ராமநாத சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் - காசி பயணம்' வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (06-12-2025) காலை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக காசிக்கு 602 பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நாளை இரவு காசி சென்றடையும் இப்பயணிகள் டிசம்பர் 12 அன்று காலை திரும்பி வருவார்கள்.
இப்பயணிகளின் பாதுகாப்பிற்காக இணை ஆணையர் ஒருவர், 5 உதவி ஆணையர்கள், 45 துறை அலுவலர்கள், 2 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு போர்வை, பற்பசை, தேங்காய் எண்ணெய், தலைவாரும் சீப்பு உட்பட 18 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ஆகும் செலவு ரூ.27,500 ஆகும். இத்திட்டத்திற்கு மட்டும் தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது.
ராமேஸ்வரம்-காசி பயணத்தில் இன்றுவரை 1,520 பேர் பயனடைந்துள்ளனர். முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட 'ஆன்மீகப் பயணம்' திட்டத்தில் மொத்தம் 3,815 பேர் பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 4 கோடி 64 லட்சம் ரூபாயை மானியம் வழங்கியுள்ளது.
ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, மூத்தோரின் மகிழ்ச்சியிலும் இறைவனைக் காணும் அரசாக நாங்கள் செயல்படுகிறோம்" என்றார் சேகர் பாபு.
இந்த ஆட்சியில்தான் திருவிளக்கு பூஜை புனரமைக்கப்பட்டு, ஒவ்வொரு பௌர்ணமியிலும் 108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்கும் வகையில் தொடங்கப்பட்டது. பூஜை செலவில் 20% மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை 81,540 சுமங்கலிப் பெண்கள் இப்பூஜையில் பங்கேற்று வீடும் உள்ளமும் நலம்பெற பிரார்த்தித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சேகர்பாபு,
"தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கிறது, சட்டப்பூர்வமாகவே செயல்படுகிறது. இன, மத மோதல்களைத் தடுப்பதே தமிழ்நாடு அரசின் குறிக்கோள். 1920, 1930, 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கேற்றப்படும் வழக்கமான இடத்திலேயே இந்நிகழ்வு நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இது சட்டத்தின் ஆட்சி, சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன, இறுதிவரை இன,மத மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன முயற்சி வேண்டுமானாலும் இந்த அரசு எடுக்கும்; மாண்புமிகு முதலமைச்சர் சட்டப்படியான போராட்டத்தை நடத்தி மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவார்.
பிறப்பால் வேண்டுமென்றால் மதங்கள் பிரிக்கப்படலாம், ஆனால் வாழ்க்கை நெறிமுறைகளில் மதங்களைப் பிரிக்க கூடாது. ஒரு தாய் மக்களாக தமிழ்நாட்டு மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குடையின் கீழ் நிற்பார்கள்.
அதிமுகவில் இப்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள் அத்தனையும் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் என்ன சொல்லுகிறாரோ அதற்கேற்ற வகையிலேதான் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொண்ட கொள்கைகளை அவர்கள் கொண்ட லட்சியங்களைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/sekarbabu-2025-12-06-14-39-31.jpg)