நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் பெருகியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் நீதித்துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் இருப்பதாக பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான படத்திட்டத்தினை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் (சேர்த்தல்/நீக்குதல்) செய்து வருகின்றன. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு புதிய கல்விக்கொள்கை வந்தது. அதன் பிறகு, பாடத்திட்டங்களில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. 

Advertisment

அதன்படி, எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் "நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" என்ற பாடத்தில் சில தலைப்புகளை என்.சி.இ.ஆர்.டி. சேர்த்துள்ளது. அதில், நீதித்துறை கட்டமைப்பையும் தாண்டி, நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் மற்றும் நீதித்துறை ஊழல்கள் என்பது போன்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, சர்ச்சையில் சிக்கும் நீதிபதிகளை முறையான விசாரணைக்கு பின் பதவி நீக்கம் செய்தல் மற்றும் ஊழல் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நீதிமன்றத்தை நாடுவதில்லை ஏற்படும் சிக்கல்கள் குறித்த தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.  

Advertisment

மேலும், உச்சநீதி மன்றத்தில் 81,000 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.7 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக அந்த பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 1,200க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களில் 309 இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 26,000 நீதிபதி பணியிடங்களில் 4,800க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

judgement

அதோடு, 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 1,600க்கும் மேற்பட்ட புகார்கள் ஒன்றிய அரசின் புகார் பதிவு இணைய தளத்தில் பதிவாகி உள்ளன. சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் தலையிட்டு நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் கொண்டிருக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அதில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி போன்றவர்கள் சில வாதங்களை முன் வைத்துள்ளனர். 

Advertisment

அதன்படி, பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட இந்த தகவல்கள் மாணவர்கள் மத்தியில் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை குலைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது வருங்கால சமுதாயத்தில் பெரும் பாதிப்பையும் நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். எனவே, இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய பாட அத்தியாயங்கள் என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய புத்தகத்தில் இருந்து பாடப்பிரிவை நீக்குவது தொடர்பாக பாட வல்லுநர்கள் மற்றும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். எனவே விரைவில் இந்த பாடம் நீக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

sc-ani

இந்த நிலையில், இன்று (26-02-26) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் இது குறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்தார். அதோடு, "இது குறித்து மதிப்பிற்குரிய பத்திரிகைகள் கூட செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம், நீதி துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. அதே நேரத்தில், பாடம் முழுமையாக திருத்தப்பட்டு, மீண்டும் புதிதாக புத்தகம் பிரசுரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற தவறுகள் இனி வரும்காலங்களில் நடைபெறாது எனவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.