“நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது” - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு!

par

The central government rejected the opposition parties demand bihar vote revision issue

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில்,  பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், ஒரு சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் இரு அவைகளிலும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைப்புக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் கூடியது. அப்போது தேர்தல் ஆணையத்தால் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எந்தவொரு விவகாரத்தையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதமும் அரசியலமைப்பு விதிகளின்படியும் நடைமுறை மற்றும் நடத்தையில் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படியும் இருக்க வேண்டும். பீகாரில் வாக்காளர் பட்டியல்களை தீவிரமாக திருத்துவது தொடர்பான பிரச்சினைக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே அவையை தொந்தரவு செய்து வருகின்றனர். இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையிலும் விசாரணையும் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த முடியாது. இந்த பிரச்சனை தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுடன் தொடர்புடையது. அது அரசியலமைப்பின்படி ஒரு சுயாதீன அமைப்பாகும். கடந்த காலங்களில் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் விஷயங்களை இந்த அவையில் விவாதிக்க முடியாது என்பது இந்த அவையிலேயே தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.  சபையை சீர்குலைக்க வேண்டாம் என்று உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். 

Bihar kiren rijiju monsoon session PARLIAMENT SESSION special intensive revision
இதையும் படியுங்கள்
Subscribe