நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்தது. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை அடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடந்த 17ஆம் தேதி காலை முதல் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அந்த பகுதியில் கிட்னி விற்பனைக்காக இடைத்தரகராகச் செயல்பட்டது ஆனந்தன் என்பது தெரியவந்தது. இவர் ஏழை தொழிலாளர்களைத் திருச்சி, பெரம்பலூர், கோவை மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பணம் வாங்கி தருவதாகவும், கிட்னியை விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்தனிடம் இது குறித்து விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. மேலும் ஆனந்தனின் வீடும் பூட்டப்பட்டிருந்தது.
கிட்னி விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாகியிருக்கும் ஆனந்தனை பிடிப்பதற்காக பள்ளிப்பாளையும் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், இதில் ஈடுபட்ட அபிராமி கிட்னி கேர் என்ற மருத்துவமனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் கிட்னி விற்பனை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்திவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் நாமக்கலுக்கு நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.