இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நிதியமைச்சர் சீதாராமன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், அதிக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருப்பதாகவும், எளிதில் புரிந்துகொள்வதற்கு இந்த புதிய வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருமான வரி சட்டத்தை எளிதாகப் புரிந்துகொள்ளுதல், சிக்கலின்றி வருமான வரி தாக்கலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நிதியாண்டில் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், புதிய வருமான வரி மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (08-08-25) மக்களவையில் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா பா.ஜ.க எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. தேர்வு குழு, தனது விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. அதில், வீட்டுச் சொத்துக்களில் இருந்து வருமானம் ஈட்டும் குடிமக்களுக்கு, இரண்டு முக்கியமான மாற்றங்களை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. பைஜயந்த் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக இன்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதா வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.