தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (20.11.2025) அறிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் சந்திரசேகர் என 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. அதில், “மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் ஆளுநர்கள் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது. காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. மாநில மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசும், அமைச்சரவையுமே முடிவு செய்யும் இடத்தில் இருக்கும். அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு. அரசியல் சாசன அமர்வுப்படி ஆளுநருக்கு மூன்றே வாய்ப்புகள் தான் உள்ளன. மத்திய அரசு கூறுவதுபோல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு இல்லை. அதாவது அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு ஆகும். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது 2வது வாய்ப்பு ஆகும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/20/sc-1-2025-11-20-14-06-49.jpg)
மேலும், மசோதாவை சட்டப்பேரவைக்கே மீண்டும் திருப்பி அனுப்புவது 3வது வாய்ப்பு. அதே சமயம் மத்திய அரசு கூறுவதுபோல் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு ஆளுநர்களுக்கு இல்லை. வேறுபாடுகளைத் தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவதுதான்.
ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும் ஒரு மசோதா மீது நீண்ட காலம் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் இருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம். அதே சமயம் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்த முடியும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது.
Follow Us