திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் சொக்கநாதர் (வயது 55). இவர் தாராபுரத்தில் நில அளவையராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு காருண்யா ஸ்ரீதர்ஷினி (வயது 19) என்ற மகள் உள்ளார். இவர் பிளஸ் 2 படித்து முடித்த  நிலையில், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக நீட் தேர்வை எழுதிய காருண்யா ஸ்ரீதர்ஷினி 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். அதனால், அவருக்கு முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த காருண்யா ஸ்ரீதர்ஷினி, மருத்துவ இடம் பெற வேண்டும் என்ற ஆசையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. 

Advertisment

அதன்படி, நீட் தேர்வில் தான் பெற்ற 228 மதிப்பெண்களை 456 என்று மாற்றி, தேர்ச்சி பெற்றதாகப் போலி சான்றிதழ் தயாரித்திருக்கிறார். அத்துடன், மருத்துவக் கலந்தாய்வில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு கிடைத்ததற்கான சான்றிதழையும் போலியாகத் தயாரித்துள்ளார். அதன் பின்னர், அந்த போலி சான்றிதழ்களுடன் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்குத் தனது பெற்றோருடன் மாணவி சென்றுள்ளார். அங்குச் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, காருண்யா ஸ்ரீதர்ஷினிக்கு சேர்க்கையும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கிய நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டன. 

Advertisment

அங்கு நடந்த சரிபார்ப்புப் பணியில், காருண்யா ஸ்ரீதர்ஷினி நீட் தேர்ச்சி மற்றும் கலந்தாய்வு இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிவு செய்து, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, மாணவி காருண்யா ஸ்ரீதர்ஷினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். பின்னர், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

inves-1

மருத்துவப் படிப்பிற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் இரவு பகலாகப் படித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாணவி ஒருவர் முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்தவழக்கில் பல்வேறு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது போலி சான்றிதழ் தயாரிப்பதற்காக மாணவியின் தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாயும், 2ஆம்  கட்டமாக 15 ஆயிரம் ரூபாயும் மேற்கு வங்க மாநிலத்திற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

Advertisment

இதன் மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீட் முறைகேடு கும்பல், காருண்யா ஸ்ரீ தர்ஷினிக்கு போலியான நீட் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்து, அரசின் போலி மின் அஞ்சல் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மருத்துவ சான்றிதழ்களை அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையையும் மாவட்ட காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.