டெல்லியின் லக்ஷ்மி நகரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்து வருபவர் ராஜேஷ் கார்க். கடந்த ஜனவரி 2 ம் நாள் அதிவேகமாக வந்த ஒரு 'தார்' வாகனம் கார்க் வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள சுற்றுச்சுவரின் மீது மோதியது. பின்னர், அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த பல நபர்கள் கார்க் மற்றும் அவரது மகனையும் தாக்கினர். அப்போது அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் சேர்ந்து அவர்களை மேலும் தாக்கியுள்ளனனர். கார்க்கின் மகன் வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டது மட்டுமல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தின் போது சுற்றி இருந்தவர்களும், இதனைத் தடுக்க முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையும் அவர்களை தாக்குதலுக்குள்ளானவர்களைக் காப்பாற்ற உதவவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஒரு காவலர் தாக்குதலுக்குள்ளான மகனின் உடலை மறைக்க உதவுவதும் அந்த காட்சிகளில் தெரிகிறது. "கார்க்கின் வீட்டில் இயங்கி வரும் ஒரு உடற்பயிற்சிக் கூடம் தொடர்பான சொத்துத் தகராறே இந்தச் சம்பவத்திற்கு காரணம்" என்று கார்க்கின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய கார்க்கின் மனைவி ரீட்டா, "தனது கணவர் தங்களது வீட்டின் அருகிலேயே தாக்கப்பட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள்" எனவும் கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளான விகாஸ் யாதவ், சுபம் யாதவ், ஓம்கார் யாதவ் மற்றும் பின்டு யாதவ் ஆகியோரைக் கைது செய்ய காவல்துறை மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளது. ஓம்காரின் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பல அரசியல் பிரமுகர்கள் உடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பிஎன்எஸ்-இன் பல பிரிவுகளின் கீழ், பிரிவு 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) உட்பட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட போதிலும், இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/5946-2026-01-05-18-06-12.jpg)