'பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலினை ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பேரூராட்சித் தலைவரை அவரது அலுவலகத்திற்குள் புகுந்து குண்டு வீசி படுகொலை செய்யத் துணியும் அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கவலையளிக்கிறது; இதற்காக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்' என பாமகவின் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் ம.க.ஸ்டாலின் இன்று காலை பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது, மகிழுந்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து வெடிகுண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இரு குண்டுகள் வெடித்துச் சிதறியதில் அலுவலக கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. குண்டு வெடித்ததில் அருண் என்ற இளைஞரும், கொலைகார கும்பல் அரிவாளால் வெட்டியதில் இளையராஜா என்ற இளைஞரும் காயமடைந்துள்ளனர். அந்த நேரத்தில் ம.க.ஸ்டாலின் இன்னொரு அறையில் மறைந்து கொண்டதால் உயிர் பிழைத்திருக்கிறார். அப்போதும் கூட அவரை அலுவலகத்தின் பிற அறைகளிலும், அலுவலகத்திற்கு பின்புறமுள்ள பகுதிகளிலும் தேடிப் பார்த்து விட்டு, அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.
ஆடுதுறையின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள பேருராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து குண்டு வீசி படுகொலை செய்ய முயலும் அளவுக்கு அந்த கும்பலுக்கு துணிச்சல் வந்தது எப்படி? தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை; அதனால் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யலாம்; அதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யாது என்ற எண்ணம் கொலைகாரர்கள் மத்தியிலும், கூலிப்படையினர் மத்தியிலும் பரவியிருப்பது தான் இதற்கு காரணம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/05/a5095-2025-09-05-17-43-46.jpg)
தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாளில் இருந்தே சட்டம் & ஒழுங்குக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. காவல்துறைக்கு ஒரு தலைவர், ஓர் அமைச்சர் இருந்தால் அது கட்டுபாட்டுடனும், தெளிவான இலக்குடனும் இயங்கும். ஆனால், தமிழக காவல்துறை ஏராளமான நிழல் அதிகார மையங்கள் இயக்குகின்றன. காவல்துறையின் கள அதிகாரிகளை உயரதிகாரிகள் வழி நடத்த முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் ஓர் அதிகார மையத்தின் ஆதரவில் இருப்பது தான் காவல்துறை செயல்பாடுகள் மோசமடையவும், சட்டம் & ஒழுங்கு சீர்குலையவும் காரணமாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான கொலைகள் நடந்துள்ளன. அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துள்ளன. அதனால், வெளியில் சென்றால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியுமா? என்று மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை நிலவுகிறது.
இந்த நிலையை மாற்றவும், தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை நிலை நிறுத்தவும் காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலினை படுகொலை செய்ய முயன்ற கும்பலையும், அதை ஏவி விட்டவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ம.க.ஸ்டாலினுக்கும், அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.