சென்னை பேசின் பாலம் ஆற்றுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் வீசப்பட்ட சம்பவத்தில் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த எட்டாம் தேதி சென்னை பேசின் பாலம் அடுத்துள்ள ஏழுகிணறு அருகே கூவம் ஆறு நான்காவது நுழைவு வாயில் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேசப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடலில் பல இடங்களில் காயம் மற்றும் கழுத்தை நெரித்த தடயம் இருந்ததால் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது கொலை செய்யப்பட்டவர் திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலி (22) என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிசிடிவி காட்சி மூலம் கிடைத்த காரின் பதிவு எண் உள்ளிட்டவற்றை ஆதாரமாக வைத்து திருப்பதியை சேர்ந்த சிவகுமார், கோபி, தாசர், சந்திரபாபு மற்றும் அவருடைய மனைவி ஹோதாவினுதா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இளைஞர் ஸ்ரீனிவாசலி ஜனசேனா கட்சியில் பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஹோதாவினுதா வீட்டில் 15 வயதிலிருந்து வீட்டுவேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களிடம் ரகசியமாக நட்பு வைத்துக் கொண்டு தங்களைப் பற்றிய ரகசியங்களை பணத்தை வாங்கிக் கொண்டு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து காளகஸ்தியில் உள்ள குடோனில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததை 5 பேரும் ஒப்புக்கொண்டனர்.
சித்திரவதை தாங்காத நிலையில் ஸ்ரீனிவாசலி தாங்கள் இல்லாத நேரத்தில் கயிற்றால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீனிவாசலி இறந்ததை அறிந்த நாங்கள் சடலத்தை மறைப்பதற்காக கார் மூலம் உடலை எடுத்து வந்து சென்னை ஏழுகிணறு பகுதியில் வீசிச் சென்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.