திருவண்ணாமலை மாநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தேரடிவீதியில் சாலையோர வியாபாரிகள், தற்காலிக கடைக்காரர்கள் அதிகளவில் கடை வைத்திருந்தனர். இந்த கடைகளுக்கு தினமும் தினசரி வாடகை என்கிற பெயரில் மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது. மக்களின் வருகை கூட்டம் குறைந்ததும் கடைகள் காலி செய்து கொண்டு போய்விடுவார்கள்.

Advertisment

இந்நிலையில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி காலை 8 மணியளவில் தேரடிவீதியில் இருந்த சாலையோர திருவிழா கால தற்காலிக கடைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை வைத்து துப்புரவு ஆய்வாளர் முருகன் தூக்கிப்போட்டு உடைத்து காலி செய் எனச்சொல்ல, அவர் சொல்லை தட்டமுடியாமல் ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர். கடையை தூக்கி கவுத்துப்போடு அப்போதான் அவன் காலி செய்வான் எனச்சொல்லியே தூக்கி வீசியது பார்த்த பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.

Advertisment

மாநகராட்சி சாலையில் வயித்து பிழைப்புக்காக கடை வைத்திருப்பவர்களை இப்படி அடவாடியாக அவர்களின் பொருட்களை உடைத்து அராஜகத்தில் ஈடுபடுவதை என்ன சொல்வது எனக்கேள்வி எழுப்பினர். இதனை வீடியோ எடுத்தவர்களையும் நான் யார் தெரியுமா என அதிகாரத்தோடு மிரட்டியுள்ளார் துப்புரவு ஆய்வாளர் முருகன். பல கடைகளை இப்படி உடைத்தும், பொருட்களோடு தூர தூக்கி தள்ளியபோது அங்கே அந்த சிறிய சாலையோர கடையின் உரிமையாளர்கள் ஏதோ ஒரு கடை வாசல் முன் நல்ல உறக்கத்தில் இருந்தவர்கள், எழுந்து வந்து தங்களது கடையை பார்த்து அதிர்ச்சியாகி கண் கலங்கினர்.

மாநகராட்சி பணியாளர்களோ, தீபம் முடிந்து 15 நாட்களாகிறது, தீபம் மலையில் எரிந்த வரை கூட்டம் வந்தது, அதுவரை  கடை வைத்திருப்பவர்களை எதுவும் சொல்லவில்லை. இப்போது கூட்டம் குறைந்துவிட்டது, கடையை காலி செய்தால் தான் மாடவீதியை நாங்கள் சுத்தமாக வைத்திருக்க முடியும், அதனாலயே காலி செய்யச்சொன்னது, அவர்கள் காலி செய்யவில்லை, அதனால்தான் பொருட்களை பறிமுதல் செய்வோம் என எச்சரித்துயிருப்பார்கள் என்கிறார்கள்.

Advertisment

இது குறித்து மாநகர கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, துப்புரவு ஆய்வராக உள்ள முருகன், பெண் துப்புரவு பணியாளர்களிடம் வேலை செய்யும்போது, குனிந்து நிமிந்து…………. என சொல்லமுடியாத வார்த்தையில் மிக கொச்சையாக இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என அமைச்சரிடம் வந்து முறையிட்டார்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னார். சிலர் அதனை தடுத்துவிட்டார்கள். 

மாநகராட்சிக்கான தொழில்வரி வசூலிக்கவேண்டியதை அவர்களை மிரட்டி அதிகமாக வாங்குகிறார் என்கிற புகார்கள் வருகின்றன. என்னை யாரும் ஒன்னும் செய்யமுடியாது என வலம் வருகிறார், இதனால் மாநகராட்சி ஆணையரின் பேச்சையும் கேட்பதில்லை, அவரின் உத்தரவையும் மதிப்பதில்லை. அவரை யாராவது கேள்விக்கேட்டால், அவர் சிலரை தூண்டிவிட்டு பிரச்சனை செய்கிறார், இதனால் அவர் என்ன செய்தாலும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இப்படி கடைகளை அராஜகமாக தூக்கி உடைத்துப்போட்டுவிட்டு அவர் போய்விட்டார், அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. இவர் செய்த வேலைக்கு அரசுக்கும், எங்கள் ஆட்சி மீதும் தான் கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது என புலம்பினார்கள்.
 
திருவிழா காலங்களில் வெளியூர்களில் இருந்து சாலையோரத்தில் கடை போடும் தற்காலிக கடைக்காரர்கள் அங்கேயே ஏதவாது ஒரு கடையோரம் படுத்து உறங்குவார்கள்.  திருவிழா கூட்டம் வருகை குறைந்ததும், வியாபாரம் இல்லாமல் போகும். அப்போது அடுத்த ஊருக்கு அவர்கள் போய்விடுவார்கள். அப்படி ஊர் ஊராக சுற்றி வியாபாரம் செய்யும் மிக சாதாரண வியாபாரிகளிடம் இப்படி அராஜகமாக நடந்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்களை காலிச்செய்யச்சொல்லி எச்சரிக்கட்டும், அபராதம் விதிக்கட்டும் அதைவிட்டுவிட்டு பொருட்களை உடைப்பது, வாரி குப்பை வண்டியில் போட்டுக்கொண்டுபோவதற்கு யார் அதிகாரம் தந்தது? எனக்கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.