16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் பகுதி விழாக் கோலம் பூண்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, 'திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... செந்தில் நாதனுக்கு அரோகரா..' என விண்ணதிர்ந்த முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்தக் கும்பாபிஷேக விழாவைக் காண்பதற்காக வெளி மாநிலங்கள், கனடா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். லட்சக்கணக்கானோர் கூடியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.